Tuesday, August 18, 2015



உலகம் சுற்றிய வாலிபன் : பாபு


சென்னை,ஆகஸ்ட் 17: சிங்கப்பூரில் பிறந்து தமிழகத்திற்கு வந்து குடும்பத்தை பிரிந்து இந்தியா முழுவதும் சுற்றி சென்னை தெருக்கள் அனைத்திலும் காலடி தடம் பதித்த பாபு அவர்களுக்கு வயது 80.
                தள்ளாத வயதிலும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குகிறார் அந்த பெரியவர். 1953 ஓல்டு எஸ். எஸ்.எல்.சி எனப்படும் அந்த காலத்து பத்தாம் வகுப்பை படித்துவிட்டு தற்போது சென்னை நகரில் குப்பை பொறுக்கி கொண்டிருக்கிறார்.
                பாபு என்கிற இவர் பிறந்தது சிங்கப்பூரில், வளர்ந்தது தஞ்சாவூரில், தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது சென்னை சத்யா நகரில். சிறு வயதில் தந்தையின் மரணத்தால் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்துள்ளது இவரது குடும்பம். தாய் வளர்ப்பில் தமது பத்தாம் வகுப்பை முடித்த இவருக்கு அடுத்த ஆண்டே நிகழ்ந்த தாயின் மரணம் பேரிடியாக அமைந்தது.
                தாய் இறந்த சிறுவன் என்பதால் உற்றார் உறவினரால் கைவிடப்பட்டார். சொந்த அண்ணனும் சொத்துக்கு ஆசைப்பட்டு இவரை வீட்டை விட்டு வெளியேற்றியதால் வாழ்கையின் மீது ஏற்பட்ட விரக்தியில் இந்தியாவின் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். ஓவ்வொரு இடத்திலும் அவர் கண்டவற்றை இன்றைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுகிறார்.
                உதாரணமாக, இவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரித்துவார் என்ற இந்து புனித ஸ்தலத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஆண்டு வெள்ளத்தால் ஏற்ப்பட்ட பேரழிவு பற்றி கூறி தான் சென்ற இடங்களை தொலைகாட்சிகளில் காட்சிகளாக பார்க்கும் போது மறுபடியும் அப்படி ஓர் பயணம் மேற் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாக குறிப்பிட்டார்.
                இந்தியாவின் பல ஊர்களை சுற்றியபின் 1985-ல் தான் சென்னை வந்துள்ளார். முதலில் பல உணவகங்களில் சர்வராக பணியாற்றிய அவர். மெரினாவில் ஓடும் குதிரைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக இவ்வேலையில் ஈடுபட்ட அவர் வயதின் முதிர்வு காரணமாக வேலையை விட்டு விட்டார். அந்த வேலை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு I don’t want to say about that matter.Then they will misunderstand meஎன்று ஆங்கிலத்தில் பதிலளித்து வியப்பளித்தார்.
                பின்  மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சேகரித்து அதனை எடைக்கு போட்டு சம்பாதித்து வந்துள்ளார். பின் சேப்பாக்கத்திலுள்ள இரண்டு பார்களில் குப்பை எடுத்து தனது வாழ்வாதரத்தை பார்த்து கொள்கிறார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குப்பைகளை போடும் இவருக்கு 150 ரூபாய் கிடைக்கிறது. வாழ்வின் மீது ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தன்னை ஓர்அனாதை என்று கூறி கொள்ளும் இவர் அனாதையாக அலைந்த ஓர் குழந்தையை எடுத்து வளர்த்து தற்போது அவரை ஓர் நல்ல வேலையில் வைத்துள்ளார். தனது வளரப்பு மகன் நன்றாக வாழ்ந்தாலும் இவர் இன்னும் தெருவிலேயே படுத்து உறக்கி வாழ்கிறார்.
                இந்திய குடிமகன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஆதாரமும் இல்லாத இவர் சில காலத்திற்கு முன் முதியோர் உதவி தொகைக்கு பதிவு செய்து அது கிடைக்கவில்லை என்று மிகவும் வருந்தினார். முதிய வயதிலும் தன்னம்பிக்கையொடு வாழும் இவர் இன்றைய இளைர்களுக்கு ஓர் முன்னுதாரணம்.

No comments:

Post a Comment