வடகிழக்கு மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சி
எழும்பூர்,ஆகஸ்ட் 31: இந்தியாவில் பாரம்பரிய கைவினைத் தொழிலின்
மகுடமாக விளங்கும் வடகிழக்கு பிராந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளின் அற்புதமான
விற்பனை கண்காட்சி தற்போது சென்னையில் துவங்கியுள்ளது.
இந்திய அரசின்
வடகிழக்கு பிராந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளின் மேம்பாட்டு ஆணையகத்தின்
சென்னைக் கிளையான “பூர்பஸ்ரீ” விற்பனை நிலையம் இந்த மாபெரும் விற்பனை கண்காட்சி சென்னை,
எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை வளாகம், கோ-ஆப் டெக்ஸ் மைதானத்தில்
அரங்கேற்றியுள்ளது.
இந்திய அரசின்
வடகிழக்கு மாநில மேம்பாட்டு (DONER) அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த அரியவகை
கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிக் கண்காட்சியை கடந்த வாரம் ஆகஸ்ட் 24 அன்று சென்னை
மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அவர்கள் துவக்கி வைத்தார்.
வடகிழக்கு பிராந்தியத்தில்
கைவினைத் தொழிலில் முன்னணியில் உள்ள அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோராம்,
மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கைவினைக் கலைஞர்கள்
வடிவமைத்து உருவாக்கியுள்ள பலவகை கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகள் இந்தக்
கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பிராந்தியவாழ்
கைவினைக் கலைஞர்களின் கலைப் பொருட்கள் விற்பனையை மேம்படுத்திடவும், கைவினைப் பொருட்களை
வாங்கிடும் வகையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்திடவும், கைவினைப்
பொருட்களுக்கு நேரடி விற்பனைச் சந்தையை ஏற்படுத்தித் தந்திடவும், புதுப்புது வடிவமைப்புகளுக்கான
பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்கான புதிய வகை கலைப் பொருட்கள் அறிமுகம் செய்திடவும் இந்த
விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது.
வடகிழக்கு பிராந்தியத்தில்
வாழும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் மேம்பட்ட கைத்திறன் அறிவைக் கொண்டு நேர்த்தியான பிரம்பு
நாற்காலிகள், சோபா செட்டுகள் ஆகியவற்றை நவீன-நவநாகரீக காலத்திற்கேற்ற வகையில் உருவாக்கி
உள்ளனர். தங்கத்தால் செய்யப்பட்டதை போல பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வகையில் அசாம்
பிரம்பு நாற்காலிகள் மற்றும் மூங்கில் இழைகளாலான திரிபுரா கூடை வகைகள் உள்ளிட்ட கலைப்
பொருட்கள் இக்கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கின்றன.
அசாம்-முகா சில்க்
சேலைகள், மல்பரி சில்க் சேலைகள், எண்டி சாதர் நாகா சால்வைகள், கமோச்சா துண்டுகள், மெத்தை
விரிப்புகள் உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்தின் துணிவகைகள் தென்மாநிலங்களில் பிரபலமாகி
உள்ளன. இன்னும் பல வண்ணங்களில், பல ரகங்களில் புகழ்மிக்க கலைப்பொருட்கள் அனைத்தையும்
ஒரே இடத்தில் வாங்கிடும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது.
கைவினைக் கலைஞர்களின்
கைவண்ணத்தில் உருவாக்கம் பெறும் கலைப் பொருட்கள் அவர்களின் கலாச்சாரப் பெருமையை உணர்த்துகின்றன.
புதுப்புது யுத்திகளைப் பயன்படுத்தி கைவினைக் கலைஞர்களின் கைத்திறனை மேம்படுத்திடும்
வகையில் திட்டங்களையும், ஆலோசனைகளையும் கைவினைக் கலைஞர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் பரிமாறிக்
கொள்ளவும் இதுப்போன்ற கண்காட்சிகளை அரசு ஊக்குவித்து வருகிறது.
ஆகஸ்ட் 24-ஆம்
தேதி தொடங்கி செப்டம்பர் 6-ஆம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில்
கைத்தறிகளுக்கு 20 சதவீதமும், கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீதமும் வாடிக்கையாளர்களுக்கு
தள்ளுபடி வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment