காசிமேடு கடலோர மீனவர்கள்: துறைமுக பிரச்சனை - நிவேதா
தண்டையார்பேட்டை : சென்னை துறைமுகத்தில் இருந்து
எண்ணூர் துறைமுகம் வரை தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக காசிமேடு
எஸ்.என்.செட்டி தெருவில் இருந்து துறைமுகம் ஜீரோ கேட் வரை ஏற்கனவே உள்ள
மேம்பாலத்துடன் இணைத்து கூடுதலாக மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு
செய்தது.
இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய மேம்பாலம் அமைக்கப்படுவதால் பல ஆண்டாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யும் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறினர். அதற்கு மாற்று ஏற்பாடு செய்தபின் மேம்பால பணியை தொடர வேண்டும். மேலும் மீன் விற்பனை செய்ய புதிய தளம் அமைத்து தரவேண்டும், கழிப்பிடம், குடிநீர் வசதி, உயர் கோபுர மின்விளக்குகள், சர்வீஸ் சாலை உள்ளிட்டவை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுபற்றி மீனவர் ஒருவர் கூறியதாவது, காசிமேடு துறைமுகம் மிகவும் பழமையானது. தினமும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழில், மீன் விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். மீனவர்களின் தொழிலை பாதிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறை, துறைமுகம் செல்ல ஏற்கனவே உள்ள மேம்பாலத்துடன் இணைத்து புதிய மேம்பாலம் கட்ட முடிவுசெய்தனர். மேம்பால பணியால் மீன்பிடி தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் கடலோர மீனவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தோம்.
தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு உடன்படிக்கை போட்டது. அதில் மேம்பால பணிக்காக கையகப்படுத்தப்படும் இடத்துக்கு பதிலாக கடலில் மணல்களை கொட்டி புதிய மீன் விற்பனை தளம் அமைக்க உறுதி அளித்தது. மேலும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று நாங்கள் கூறிய கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியது.
ஆனால் உடன்படிக்கை போட்டு சுமார் 5 மாதமாகியும் எங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு நாங்கள் செல்லும் பாதைகளெல்லாம் மூடப்படுகின்றன. எனவே எங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதி
மொழியை 15 நாட்களுக்குள் நிறைவேற்றா விட்டால் மீனவர்களை பாதிக்கும் மேம்பால பணியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
No comments:
Post a Comment