Monday, December 14, 2015

கண்ணகி நகரில் வீடு கொடுத்தால் போதும்


புதுபேட்டை டிச.14 : சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் கூவம் சாலைக்கு சென்றதும் சோர்வடைந்த முகத்துடன் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையுடன் சாலை ஓரத்தில் அமர்ந்து இருந்தார், உமா. அவர்களிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டதும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி கேட்டதும் கலங்கிய கண்களுடன் விவரிக்க தொடங்கினார்.
“ஒரு மாதத்திற்கு முன்னால் பெய்த மழையின் போதே எங்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் வந்து விட்டது. ஆனால் அப்போது சேற்றை வாரி போட்டுவிட்டு வாழ தொடங்கிவிட்டோம். அதோடு மழை நின்று விட்டது என்று எண்ணியிருந்த போது அடுத்த மழை பேரிடியாக அமைந்தது எங்களுக்கு. கடந்த 1ஆம் தேதி போது பெய்த கனமழையின் காரணமான அன்றிரவு எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வர தொடங்கியது. எனக்கு கணவர் இல்லை நானும் எனது நான்கு மகன்களும் அந்த மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்றோம். பின் அருகிலுள்ள போலிஸ் கோட்ரசில் தங்க இடம் கொடுத்தனர்.
எங்கள் வீடு கூவம் நதிக்கு மிக அருகில் இருப்பதால் முதலிலேயே பாதிக்கப்பட்டது. மண் அரிப்பு ஏற்பட்டு கூரை மொத்தமாக சரிந்து விட்டது. வீட்டில் இருந்த எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை. என்னுடைய பர்சில் வைத்திருந்த என்னுடைய மகனகளின் அடையாள அட்டைகள் மட்டுமே தற்போது என்னிடத்தில் உள்ளது. மேலும் எங்களுக்கு அரசாங்த்திலிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. வெள்ளம் வந்த பிறகு மூன்று நாட்கள் மட்டும் அரசு உணவு கொடுத்தது. அதுவும் சுகாதாரம் இல்லாமலே இருந்தது. பொதுவாக காலையில் பொங்கல் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் புழு இருக்கும். மேலும் உப்பு இருக்காது. மதியம் கொடுக்கும் உணவில் உப்பு அதிகமிருக்கும். கேட்டால் காலையில் உப்பு இல்லததுக்கு இப்போது உப்பு சேர்த்து போட்டிருக்கோம். உங்களுக்கு இதை தருவதே அதிகம் என்று அலட்சியமாக பதில் வரும்.
இந்த மழைக்கு முன்னரே கண்ணகி நகரில் எங்களுக்கு வீடு தருவதாக பேசிகொண்டனர். ஆனால் அது வெறும் பேச்சோடு நின்று விட்டது. மழைக்கு பின்னரும் அது பற்றி பேச்சி வரவில்லை மாறாக எங்களுக்கு தாம்பரம் தாண்டி வீடு தருவதாக கூறுகிறார்கள். நான் இதே ஏரியாவில் வீதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். மேலும் என்னை போன்றே மற்றவர்களும் இங்கு சுற்றி இருக்கும் இடத்திலேயே வாழ்வாதாரம் கொண்டுள்ளனர். மேலும் எங்கள் பிள்ளைகளும் அருகிலுள்ள பள்ளிகூடங்களிலேயே படித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு சென்னைக்கு வெளியே வீடு கொடுத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். எங்களது வாழ்வாதரமும் எங்களது பிள்ளைகளின் படிப்பும் முற்றிலுமாக பாதிப்படையும். எனவே எங்களுக்கு கண்ணகி நகரில் வீடு கொடுத்தால் போதும்.
நான் எப்போதும் என் கடைக்கு தேவையான காய்கறிகளை பிராட்வேயில் தான் வாங்குவேன். அதுபோலவே கண்ணகி நகரிலிருந்து பஸ் பிடித்து வந்து பொருட்களை வாங்கிய பின் இங்கே வந்து எனது பிழைப்பை பார்த்து கொள்வேன். கணவர் இல்லாமல் எனது பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது மிகவும் கடிமான ஒன்று. அப்படியும் என் ஒருத்தி சம்பாத்தியத்தில் 4 பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறேன். அரசாங்த்தின் மூலம் எவ்வித நிவாரண பணிகளும் எனக்கு கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் வந்து குடிசை விழுந்ததை பற்றி விசாரித்து விட்டு சென்று விட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தான் எங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். நேற்று கூட சிலர் வந்து பாதிக்கப்பட்ட குடிசைகளை சுத்தம் செய்ய உதவினர். நாங்கள் தற்போது இருக்கும் சூழலில் இப்போதே கிளம்பி கண்ணகி நகர் போக சொன்னாலும் போய்விடுவோம். எங்களிடம் எந்த வித உடைமைகளும் இல்லை. எனவே அரசு எங்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்”.

No comments:

Post a Comment